For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை: அமெரிக்காவின் 248வது தேசிய நாள் விழா - விண்வெளி கூட்டு செயல்பாடுகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு!

09:36 PM Jul 19, 2024 IST | Web Editor
சென்னை  அமெரிக்காவின் 248வது தேசிய நாள் விழா   விண்வெளி கூட்டு செயல்பாடுகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு
Advertisement

Advertisement

சென்னையில் நடைபெற்ற அமெரிக்காவின் 248வது தேசிய நாள் விழாவிற்கு தலைமை வகித்த‌ இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, அமெரிக்கா-இந்தியா இடையேயான விண்வெளி கூட்டு செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜூலை 4, 1776 அன்று செய்யப்பட்ட சுதந்திரப் பிரகடனத்தை அமெரிக்க தேசிய தினம் குறிக்கிறது. 248வது அமெரிக்க தேசிய நாள் (சுதந்திர தினம்) விழா நேற்று (ஜூலை 18) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி தலைமை வகித்தார். விண்வெளி ஆய்வு மற்றும் ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் தொடர்ந்து வலுவடைந்து வரும் அமெரிக்க-இந்திய கூட்டுறவை எரிக் கார்செட்டி பாராட்டினார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த‌ இந்நிகழ்ச்சியில், எரிக் கார்செட்டி விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெம் கல்வியில் இரு நாடுகளின் கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்ததோடு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான வலுவான நட்பை அடிக்கோடிட்டு காட்டினார். இந்த முயற்சிகளை முன்னெடுப்பதில் தென்னிந்தியாவின் முக்கிய பங்கை அவர் பாராட்டினார்.

நிஸார் (நாசா-இஸ்ரோ ரேடார்) பணியில் அமெரிக்க-இந்திய விண்வெளி ஒத்துழைப்பை எரிக் குறிப்பிட்டார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க ராக்கெட்டில் இந்தியரை அனுப்புவது குறித்தும் அவர் பேசினார். இதுகுறித்து அவர் “விண்வெளி நமது குறுகிய அடையாளங்களை அகற்றி, எல்லைகள் மற்றும் பெருங்கடல்களை தாண்டி நம்மை இணைக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சிறப்பான உறவை இது உருவாக்குவதோடு, ஒரே மனிதக் குடும்பமாக நம்மை அடையாளப்படுத்துகிறது" என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய பாலமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுகிறது. உலகளாவிய சிந்தனைகள், ஆராய்ச்சி மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அமெரிக்க துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்பு நமது கல்வி முறையை மேம்படுத்துகிறது.

அமெரிக்க வரலாற்றின் மைல்கல்லை நினைவுகூரும் வேளையில், தமிழ்நாடு மற்றும் அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவோம். நமது இளைஞர்கள் மற்றும் சமுதாயங்களின் வளமான எதிர்காலத்திற்காக அமெரிக்க துணைத் தூதரகத்தின் சேவைகள் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பின் உணர்வைத் தொடர்ந்து தழைக்க செய்வோம்” என தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹோட்ஜஸ், கெளரவ விருந்தினர் நடிகர் கமல் ஹாசன் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெம் கல்வியை மேம்படுத்துவதில் அமெரிக்க-இந்திய உறவுகளின் பன்முகத்தன்மையை பாராட்டினர். கமல்ஹாசன் தனது உரையில், விண்வெளியை கருப்பொருளாக கொண்டு தேசிய தின நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். சமீபத்திய விண்வெளி பயணங்களில் பெண்களின் பங்கு குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இளம் பாடகி ஐனா பதியத் அமெரிக்க தேசிய கீதத்தையும், பாடகி பவித்ரா சாரி இந்திய தேசிய கீதத்தையும் பாடினர்.

Tags :
Advertisement