சாம்பியன்ஸ் டிராஃபி : AUSvsSA போட்டி மழையால் ரத்து... அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அதேசமயம் குரூப் பி-யில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 7வது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுவதாக இருந்தன. ஆனால் ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், மழை நிற்காத காரணத்தினால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இரு அணிகளும் கடைசி போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இல்லையென்றால் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணி தங்களது இரண்டு ஆட்டங்களை வெற்றி பெற்றால், அவர்கள் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த பிரிவில் இனிவரும் ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.