திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் பெற்ற பெண்
வருவாய் ஆய்வாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பாரதி என்பவர் மேல் நாச்சிபட்டு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற முதியவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், விவசாயி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விவசாயி அளித்த புகாரின் பேரில் ரசாயனம் கலந்த நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து பெண் வருவாய் ஆய்வாளரிடம் கொடுக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள் :உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 122 பேர் பலியான விவகாரம்! – அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டு பகுதியில் சிட்டா அடங்கல் வழங்க மறுத்ததால் விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.