“பழைய ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து, மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” - திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!
பழைய ரயில்களுக்கு நிறம் மாற்றி, வடிவம் மாற்றி கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு கொள்ளை அடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூரில் ஜெயலலிதாவின் 76ம் ஆண்டு பிறந்த
நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான சீனிவாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :
பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி, மத வெறி பிடித்த கட்சி என்பதால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தமிழ்நாடு வரும் மோடி, ரயில் நிலையங்களை புதுப்பித்து கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நவீனப் படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால், ஏற்கனவே இருந்த ரயில்களை பெயிண்ட் அடித்து நிறம் மற்றும் பெயர்களை மாற்றி, வடிவத்தையும் மாற்றி ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். 500 ரூபாய் கட்டணத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை சென்று வந்த நிலை மாறி, தற்போது 3000 ரூபாய் செலவு செய்து டிக்கெட் எடுத்து ரயிலில் சென்னை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
வந்தே பாரத், தேஜஸ், மெட்ரோ என ரயில்களுக்கு பெயர் வைத்து இந்தியா முழுவதும் புதுவகையான கொள்ளையில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து நாள்தோறும் செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரம் செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தெய்வத்தின் அருளால் முதலமைச்சராக தேர்வானவர். அவர் ஏழையின் பங்காளன், ஏழைகளுக்காக கண்ணீர் விடுபவர். எம்ஜிஆருக்கு இணையானவர்.
ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் பதவியை பிடுங்கி விடுவேன்
எனப் பேசுகிறார். யார் பதவியை யார் புடுங்குவது? தெய்வத்தின் அமைப்பு எடப்பாடி
பழனிசாமிக்கு உள்ளது. கட்சியை உடைக்கலாம், எடப்பாடியாரையும் எங்களையும்
பிரித்து விடலாம் என நினைத்தார்கள். ஆனால், அவை அனைத்தும் முடியாமல்
போனது.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.