மாநில உரிமைகளை மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்புக்கு ஆபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
அரசியல் மாண்புகள், மாநில உரிமைகளை மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்புக்கு ஆபத்து; மதவெறி அரசியலால் மாநில அரசின் மக்களை மத்திய அரசு நடுங்க செய்கிறது என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அந்த கடிதத்தில் தெரிவித்ததாவது:
‘நவம்பர் 15-ம் நாள் குமரி முனையில் தொடங்கிய திமுக இளைஞர் பேரணி தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வள்ளுவர் மண்டலத்திலும், மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலத்திலும், வடமாவட்டங்களை உள்ளடக்கிய அண்ணா மண்டலத்திலும், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கிய கலைஞர் மண்டலத்திலுமாக 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் மேற்கொண்டு நவம்பர் 27-ம் நாள் சேலத்தில் நிறைவடைகிறது.
சேலத்தில் டிசம்பர் 17-ம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி 30 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிய இளைஞர்களால் இயக்கத்திற்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில்தான் 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கழகத்தின் இளைஞரணியைத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்கள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத – மொழி ஆதிக்க - மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரை தான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி.
கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.