For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் - அண்ணாமலை பதிவு!

01:17 PM Dec 21, 2023 IST | Web Editor
மத்திய சிறையில்  திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும்   அண்ணாமலை பதிவு
Advertisement

மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரம் டிச. 21-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், இதற்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இதன்படி இன்று (21.12.2023) பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ரூ.50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு, மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும்படி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று,  இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement