துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்: போலீசார் விசாரணை
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (38) என்பவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காமராஜர் துறைமுக ஸ்டேஷன் சிக்னல் பாயிண்ட் அருகே பணியில் இருந்துள்ளார். குமாரின் பணி நேரம் முடிவடைந்து, அவரை தணிக்கை செய்ய உதவியாளர் ராஜு என்பவர் வந்துள்ளார். அப்போது, அதிகாலையில் இன்சாஸ் ரக துப்பாக்கியை கையில் பிடித்தபடி தலையில் ரத்த காயத்துடன் இறந்த நிலையில் இருந்த குமாரை உதவியாளர் ராஜு பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, உதவியாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மீஞ்சூர் போலீசார் குமாரின் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்கு பதிவு செய்த போலீசார் குமார் பணி சுமை காரணமாக உயிர் இழந்தாரா? அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமார் தான் வைத்திருந்த இன்சாஸ் ரக துப்பாக்கி மூலம் ஒரு முறை கழுத்தில் சுட்டதில், தலை வழியாக குண்டு பாய்ந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த குமாருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.