தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட மத்திய அரசு வழங்குவதில்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட வழங்குவதில்லை என்றும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்குவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நிதி நெருக்கடி சுமைகள் இருந்தபோதும் பொங்கல் சிறப்பு பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
சுமைகளில் இருந்த மாநில அரசுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறிய கருத்துக்கு பதில் தருவது எனது கடமை. மத்திய அரசு ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ரூ.2.46 லட்ச கோடி வரி, ரூ.2.28 லட்சம் மானியம் மற்றும் உதவித்தொகை. நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி நம்மிடத்தில் இருந்து பெற்றுள்ளனர். மறைமுக வருவாய் பற்றி அவர்கள் கூறவில்லை.
இதையும் படியுங்கள் : மீண்டும் பேச்சுவார்த்தை - போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு
மத்திய அரசால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 2014 - 2023 வரை அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஆளுமை மீது நமக்குள்ள உரிமையை இழந்துள்ளோம். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய உரிய தொகை வரவில்லை என்று புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் ரூ.63,000 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இன்று வரை இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.”
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.