வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஆயத்த ஆடைகள், உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வா்த்தக துறையின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவின் எந்தவொரு நில சுங்கச்சாவடிகள் வழியாகவும் வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படாது.
எனினும் நவ ஷேவா மற்றும் கொல்கத்தா கடல் துறைமுகங்கள் வழியாக இறக்குமதி அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பழம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், மர அறைகலன்கள் உள்ளிட்டவை எந்தவொரு நில சுங்க நிலையங்கள் வழியாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நில சுங்கச்சாவடிகள் வழியாக வங்கதேசத்தில் பருத்தி நூல்களை இறக்குமதி செய்ய அந்நாடு தடை விதித்து, கடல் துறைமுகங்கள் வாயிலாக மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்தது. இந்த நிலையில், இதற்கு பதிலடியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.