"நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்" - டிடிவி தினகரன்!
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி நெல் அதிகளவில் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல் சாகுபடி மட்டுமல்லாது, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் என பல லட்சக்கணக்கான ஏக்கர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நெல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யத் தவறியதே, பல லட்சம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாக முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இரவு, பகலாக அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மணிகள் அனைத்தும் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியிருப்பதோடு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யும் பணியை தொடங்குவதோடு, விளைநிலங்களிலேயே மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.