தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது - மக்களவை வாக்குவாதம் குறித்து டி.ஆர்.பாலு விளக்கம்!
வெள்ள பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை எனவும், தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை தொடங்கிய சிறிது நேரத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கான உரிய வெள்ள நிவாரணத் தொகையை ஒதுக்காதது குறித்து பேசினார். அப்போது பாஜக எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான நிதியானந்த ராய் குறுக்கிட்டதாக தெரிகிறது.
இதனால் டி.ஆர்.பாலு, அமைச்சரை கடுமையாக விமர்சித்தார். நிதியானந்த ராய் எம்.பி.யாக இருக்கவே தகுதி இல்லை. மத்திய அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் ஒரு ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரண்டு கட்சிக்கு எம்.பி.களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சரை விமர்சித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். தொடர்ந்து, நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என விமர்சித்தார். பின்னர் மக்களவையில் இருந்து அனைத்து திமுக எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் நடந்த வாக்குவாதம் குறித்து திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் தெரிவித்ததாவது:
“என்னை கேள்வி கேட்க விடாமல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார். அவர் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். தேர்தல் வியூகத்துடன் மட்டுமே பாஜக உறுப்பினர்கள் பேசுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமல், இந்தியா கூட்டணியை தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் நல்ல நண்பர். ஆனால் அவரின் உரை வருத்தமளிக்கிறது.
வெள்ள பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. அதைத்தான் இன்று நாடாளுமன்றத்தில் கேட்டோம். தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. பாஜக உறுப்பினர்கள் கூறுவது போல், பேசியது தலித் அமைச்சர் என்றால், நிவாரணம் குறித்த கேள்வியை எழுப்பியவரும் ஒரு தலித் என்பதை அவர்கள் அறிவார்களா? நிவாரணம் கிடைக்கும் வரை திமுக போராடும்.
இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக பயந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை இந்தியா கூட்டணியின் 28 கட்சிகளும் எதிர்க்கும். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. நிவாரணம் தொடர்பாக வரும் 8-ம் தேதி காலை முதல் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெற உள்ளது” இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்தார்.