"பிரபலங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லை.. சாதாரண மனிதராக இருந்திருந்தால்.." - #RupaliGanguly-யை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
நடிகையும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
பிரபல நடிகரும், பாஜக உறுப்பினருமான ரூபாலி கங்குலி தொலைக்காட்சி தொடரான ‘அனுபமா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் ரூபாலி கங்குலிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை பெற்றுக்கொடுத்தது. சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் பரிவார் விருதுகளில் ரூபாலி கங்குலி பல விருதுகளை வென்றார். இந்த விருது விழாவை முடித்துவிட்டு திரும்பும்போது, ரூபாலி கங்குலி செய்த செயல் அவர் சமூக ஊடகங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ரூபாலி கங்குலி விருது வழங்கும் விழாவில் இருந்து ஸ்கூட்டரில் திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்கூட்டரின் பின்புறம் அமர்ந்திருந்தார் ரூபாலி கங்குலி. ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவரின் பெயர் கௌஷல் ஜோஷி என்று கூறப்படுகிறது. இவர் நடிகை ஷெஹ்னாஸ் கில்லின் மேலாளர். இவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியாமல் சாலையில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானவுடன், சமூக ஊடக பயனர்கள் ஸ்கூட்டரை ஓட்டிய கௌஷல் ஜோஷியும் ஹெல்மெட் அணியவில்லை என்பதை உடனடியாக கவனித்தனர். பல பயனர்கள் ஒரு அரசியல் கட்சி உறுப்பினராக இருந்தும் ரூபாலி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக கடுமையாக ட்ரோல் செய்தனர்.
ஒரு சமூக ஊடக பயனர், “இவர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை?” என பதிவிட்டிருந்தார். அதற்கு மற்றொரு பயனர், “இந்த பிரபலங்களுக்கு ஹெல்மெட் தேவையில்லை. சாதாரண மனிதராக இருந்திருந்தால், அபராதம் விதித்திருப்பார்கள்” என கருத்து தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல பயனர்கள் மும்பை போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், அபராதம் சமூக ஊடகங்களில் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (செப். 21) இரவு நடைபெற்ற ஸ்டார் பரிவார் விருதுகளில் ரூபாலி கங்குலி மூன்று விருதுகளை வென்றார். இவர் சிறந்த மனைவி, சிறந்த மருமகள் மற்றும் சிறந்த தாய் போன்ற கதாபாத்திரங்களுக்கான விருதுகளை வென்றார். ‘அனுபமா’ தொடரில் ரூபாலி கங்குலியுடன் இணைந்து நடித்த கவுரவ் கண்ணா சிறந்த தந்தைக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.