பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
“ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில், “பொன்
மாணிக்கவேல் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட
வேண்டும்” என கோரிக்கை மனுவை முன் வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் DIG அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிபிஐ விசாரணையை நடத்தி அதனடிப்படையில் வழக்குப் பதிவும் செய்தது.
மேலும் மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு செய்தேன். FIRஐ தவிர பிற ஆவணங்களை தர இயலாது எனக்கூறி மனுவை திருப்பி அனுப்பி விட்டனர். ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி,
“FIR போதிய விவரங்கள் இன்றி மேலோட்டமாக பதியப்பட்டுள்ளது. குற்றம்
சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு, இவ்வாறு வழக்குப் பதிவு செய்தால்,
வருங்காலங்களில் குற்றம் சாட்டப்படும் நபர்கள், எந்த விசாரணை அதிகாரி மீது
வேண்டுமானாலும் புகார் கொடுத்து, இவ்வாறு வழக்குப் பதிவு செய்யலாமா? இது
அமைப்பையே சீர்குலைக்காதா? என கேள்வி எழுப்பினார்.
இவ்வாறிருந்தால் அதிகாரிகள் எவ்வாறு நேர்மையாக, சுதந்திரமாக பணியாற்ற
முன்வருவர்?. பொன் மாணிக்கவேலின் முன் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதா?. முறையாக பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்கள் இன்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு உகந்தது அல்ல.
ஆகவே, பொன்மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
விதிக்கப்படுகிறது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வழக்கில் குற்றப்
பத்திரிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது. பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அலுவலராக பொறுப்பேற்பதற்கு முன்பும், பின்பும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பான
விபரங்களை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அதோடு, சிபிஐ தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.