காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - ராகுல் காந்தி!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ராகுல் காந்தியும் தொடர்ந்து இதற்கு ஆதரவாகப் பேசி வருகிறார். இந்நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி பேசியதாவது:
“மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேர் உள்ளனர் என்பது துல்லியமாக அறிவிக்கப்படும். இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நலத்திட்டங்கள் உருவாக்கப்படும். இது ஒரு புரட்சிகரமான, மக்களின் வாழ்க்கையை மாற்றும் நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம்.
மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய அளவிலும் இதே போன்ற கணக்கெடுப்பு நடத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி தன்னை எப்போதும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவர் என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால், தேசிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்த பிறகு, அது குறித்து மட்டும் பேச மறுக்கிறார்.
இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் எத்தனை பேர் நாட்டில் உள்ளார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்று பிரதமர் மோடி கருதுகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரியான முறையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படாதது போன்ற காரணத்தால் சிறு, நடுத்தர தொழில்களும் வர்த்தகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் வேலையின்மையும் அதிகரித்துவிட்டது. பெரும் தொழிலதிபர்கள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில்கள்தான் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பளித்து வருகின்றன”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.