தமிழக ஆளுநருக்கு எதிரான ரிட் மனு - விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கிடுவது தொடர்பாக புதிய மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான வழக்குகள், சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் மீதான வழக்குகளின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த கூடுதல் மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜன. 17) விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினமே இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.