தேர்தல் நடத்தை விதிமீறல் : எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட 33 பாஜகவினர் மீது பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் மார்ச் 16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பாஜகவினர் 33 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மேட்டுப்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன பேரணி சென்றதாக தேர்தல் பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.