ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே, துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் குறுக்கீடு தொடர்பாக மற்றொரு ரிட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “சட்டவிதி இல்லாத நிலையில் தன்னிச்சையாக குழு அமைத்து அதை அரசாணையாக வெளியிட ஆளுநர் கூறுகிறார். துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசியல் சாசன நடைமுறை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆளுநரின் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான ஆளுநரின் செயல்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அன்றைய தினம் இது முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனவும் அன்றைய தினமே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.