மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து!
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவின் கீழ் உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில்,
“கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் பட்டியலின பிரிவில் பிறந்த திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாணையை ரத்து செய்து, பட்டியலின திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பட்டியலினத்தை சேர்ந்த திருநங்கைகள் எஸ்சி, எஸ்டி சான்றிதழ் வைத்திருந்தால் அந்தந்த சாதி என கருதப்படுவார்கள் என்றும், சான்றிதழ்கள் இல்லாத திருநங்கைகள் மட்டுமே எம்பிசி பிரிவின் கீழ் கருதப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, கடந்த 2015 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசியலமைப்பு சட்ட பிரிவுகளை மீறுவதாக உள்ளதாக கூறி அந்த அரசு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும் 12 வார காலத்திற்குள் அனைத்து சாதிக் குழுக்களிலும் உள்ள திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.