காற்று மாசுபாட்டில் எந்த நகரம் முதலிடம் தெரியுமா?
காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் மேகலயாவின் பைர்னிஹாட் நகரம் உள்ளதாக எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மோசமான காற்று மாசுபாடு நிலவிய நகரங்களின் பட்டியலை எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. அதில் மேகாலயத்தின் பைர்னிஹாட் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பீகாரின் பெகுசராய், உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்த ஆய்வுக்கு 227 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதாவது கடந்த ஆண்டில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நாள்களுக்குக் காற்றின் தர நிலை பதிவு செய்யப்பட்ட நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 85 நகரங்கள் மத்திய அரசின் 'தேசிய தூய்மையான காற்று திட்டத்தில்' இடம்பெற்றுள்ளவை.
இதையும் படியுங்கள்: வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!
இது குறித்து சிஆர்இஏ அமைப்பின் தெற்காசிய ஆய்வாளர் சுனில் தஹியா கூறியதாவது:
"131 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்த போதிலும், 44 நகரங்களில் மட்டுமே மாசுபாட்டுக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படாத நிலையில், தேசிய தூய்மையான காற்று திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 40 சதவீதம், பெரும் அளவில் பயன்தராத தீர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில், 37 நகரங்களில் மட்டுமே நிர்ணயித்த அளவை விட பி.எம்.10 குறைவாகக் காணப்பட்டது. இந்தத் திட்டத்தில் இடம்பெறாத 181 நகரங்களில், பி.எம்.10 அளவு காற்றின் தர நிலையைக் கடந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காற்று மாசடைந்த முதல் 10 நகரங்கள்
பி.எம்.10 அளவு (மைக்ரோ கிராம்/க.மீ.)
1. பைர்னிஹாட் (301)
2. பெகுசராய் (265)
3. கிரேட்டர் நொய்டா (228)
4. ஸ்ரீ கங்காநகர் (215)
5. சாப்ரா (212)
6. பாட்னா (212)
7. ஹனுமன்கர் (212)
8. டெல்லி (206)
9. பிவாடி (203)
10. ஃபரீதாபாத் (196)