திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு...கேட்பாரற்று கிடந்த ரூ.1.3 கோடி மதிப்பிலான தங்கம்!
திருச்சி சர்வதேச விமான நிலைய கழிவறையில் சுமார் ரூ.1.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் கேட்பாரற்று கிடந்தது. அதனை மீட்ட விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்றது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் இன்று (மார்ச் 8) திருச்சி விமான நிலையத்தில், வருகை பகுதியில் உள்ள கழிவறையில் சுமார் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 56 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம் கிடப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பேஸ்ட் வடிவிலான தங்கத்தை கைப்பற்றியதோடு, உடனடியாக அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, இலங்கையில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.