For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ் வார்த்தையும் தமிழ்நாடும் இடம்பெறாத பட்ஜெட் உரை!

04:30 PM Jul 23, 2024 IST | Web Editor
தமிழ் வார்த்தையும் தமிழ்நாடும் இடம்பெறாத பட்ஜெட் உரை
Advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில், தமிழ் வார்த்தையும் தமிழ்நாடு என்பதும் இடம்பெறாமலேயே ஒட்டுமொத்த உரையும் வாசித்து முடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். சுமார் 84 நிமிடங்கள் அவரது பட்ஜெட் உரை அமைந்திருந்தது. ஆனால், இதில் ஒரு முறை கூட அவர் தமிழ் வார்த்தையை பயன்படுத்தவில்லை.

ஆனால், வழக்கமாக, ஒவ்வொரு பட்ஜெட் உரையின்போதும், தமிழ்ச் சங்க இலக்கிய நூல்களிலிருந்தோ, திருக்குறளிலிருந்தோ ஒன்று அல்லது இரண்டு மேற்கோள்களை சுட்டிக் காட்டி அவர் பட்ஜெட் உரைக்கு சிறப்பு சேர்ப்பார். ஆனால், இந்த முறை ஒரு தமிழ் வார்த்தையும் இடம்பெறாதது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மத்திய பட்ஜெட் உரை என்றாலே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தமிழ் மேற்கோள்கள், தமிழர்களிடையே தனிக்கவனம் பெரும். கடந்த 2019ஆம் பட்ஜெட் உரையில், வரி விதிப்பு முறை கடுமையாக இருக்கக் கூடாது என்பதை கூறும் புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள்காட்டியிருந்தார்.

'காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே'

என்று தொடங்கும் பாடல், சங்க காலப் புலவர் பிசிராந்தையார், பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை கூறுவது போல அமைந்த பாடல்.

2020ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில்

'பூமி திருத்தி உண்'

என்ற ஆத்திச்சூடி பாடலை பாடி, விளை நிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் எனப் பொருள் படும் பாடலைப் பாடி அதன்படி, மத்திய அரசு நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2021ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின்போது,

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து’

என்ற திருக்குறளை அதன் பொருளோடு விளக்கியிருந்தார்.

அதன்படி, கடந்த 2021 - 22ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது,

‘இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’

என்ற இறைமாட்சி எனும் அதிகாரத்தின் கீழ் வரும் திருக்குறளை உவமையாக மேற்கோள்காட்டியிருந்தார் மத்திய நிதியமைச்சர்.

தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டு, புராண இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் சாந்தி பருவ வரிகளை சுட்டிக் காட்டினார். சாந்தி பருவத்தில் அஸ்தினாபுர மன்னராக தருமருக்கு முடிசூட்டும் படலமும், புதிய மன்னனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் குறித்து பிதாமகர் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இடம்பெற்றிருந்தன.

2023 - 24 பட்ஜெட் உரையில் தமிழ் சங்க இலக்கிய நூல்களை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன் அதுபோன்ற எதையும் செய்யவில்லை. தொடர்ந்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ் வார்த்தைகளும் இல்லை, தமிழ்நாட்டிற்கு என எந்த சிறப்பு திட்டங்களும் இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு நிதி உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Tags :
Advertisement