Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இளைஞர்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்" - அண்ணாமலை கருத்து!

08:47 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

இளைஞர்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு புதிய திட்டங்களை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கொண்டுள்ளது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"நரேந்திர மோடி 2014 – 2024, பத்தாண்டு கால ஆட்சியின் விளைவாக, உலக அரங்கில் இந்தியா இன்று நிலையான மற்றும் வேகமாக வளர்ச்சியடையும் நாடாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பண வீக்கம் குறைவாகவும், வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் இருக்கும் நாடுகளில், இந்தியா முதன்மையாக உள்ளது. இதனால், இந்தியப் பணத்தின் மதிப்பும் உலக அரங்கில் அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 11.7 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 11.6 கோடி வீடுகளில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குழாயில் குடிநீர் வழங்கப்படுகிறது. 10.3 கோடி பெண்கள், உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். 6.9 கோடி பேர், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2.6 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர, உலக அளவிலான நிறுவனங்கள், நமது நாட்டில் முதலீடு செய்வதற்குப் பெருமளவில் முன்வரும் அளவுக்கு, நமது நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில், வரும் 2047 ஆம் ஆண்டில், நமது நாடு வளர்ச்சியடைந்த நாடாக, புதிய இந்தியாவாக உருவாகியிருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, நமது நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது. விவசாயம், கல்வி, உற்பத்தி, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, தொழில்துறை, எரிசக்தி, பசுமை சக்தி என, ஒவ்வொரு துறைகளிலும், நமது நாடு தொடர்ந்து முன்னேறி சாதனை படைத்து வருகிறது. அதன் ஒரு படியாகவே, இந்த 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : நடிகர் சூரியின் ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23-ல் வெளியீடு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஏழாவது முறையாக, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து, புதிய வரலாறு படைத்திருக்கிறார். நாட்டின் வளர்ச்சியையும், மக்கள் நலனையும் சார்ந்த, பல அற்புதமான திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

குறிப்பாக, ஏழை எளிய மக்கள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும்படி கடந்த பத்து ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்கள் அனைத்தையும், இன்னும் மேம்படுத்தும் வண்ணம், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சுமார் 2.6 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டு, ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ள நிலையில், தற்போது, கிராமப்புறங்களில், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு, மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், நகர்ப்புறப் பகுதியில் வசிக்கும் 1 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, ரூ.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு, நமது நாட்டில் வீடற்றவர்களே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது.

மகளிர் மேம்பாடு:

ஒரு நாட்டின் வளர்ச்சியில், பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதை உணர்த்த, மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த அரசு, தற்போது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்காக, ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பெண்களுக்கு அரசு கொடுக்கும் தொடர் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

கிராமப்புற வளர்ச்சி:

கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 2.66 லட்சம் கோடி நிதியும், வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் மேம்பாடு:

இளைஞர்கள் மேம்பாட்டுக்காக, பல்வேறு புதிய திட்டங்களை,  மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இளைஞர்கள் திறனை மேம்படுத்த உயர் வசதிகளுடன் 1,000 தொழில்துறை திறன் வளர்ப்பு மையங்கள், திறன் கடன் திட்டம் சீரமைக்கப்பட்டு, மத்திய அரசு நிதி பாதுகாப்போடு ரூ.7.5 லட்சம் வரை கடன் பெற வழிவகை, அமைப்பு சார் நிறுவனங்களில், புதிதாகப் பணியில் சேரும் அனைத்து இளைஞர்களுக்கும், ஒரு மாத ஊதியம், அரசு சார்பில் நிதியுதவி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் இளைஞர்களுக்கு, திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கும், திறன் மேம்பாட்டுத் திட்டம், நாட்டிலுள்ள 500 முன்னணி நிறுவனங்களில், 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையுடன் பயிற்சிப் பணி, பிற மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அரசு, தனியார் பங்களிப்பில் குறைந்த செலவில் தங்குமிடம் போன்ற அறிவிப்புகள், நாட்டின் எதிர்காலத் தூண்களாகிய இளைஞர்கள் முன்னேற்றம் குறித்த மத்திய அரசின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

மேலும், தொழில் முனைவோருக்கான முத்ரா கடனுதவித் திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகையின் உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்திருப்பது, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை மிகவும் அதிகரிக்கும்.

கல்வித் துறை

கல்வித் துறைக்கு, ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்களுக்குப் பெரிதும் பலனளிக்கும்.

நாடு முழுவதும், சூரிய ஒளி தகடுகள் அமைக்கும் திட்டத்தின் மூலம், 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், மின் பற்றாக்குறை குறைவதோடு, சூரிய ஒளி மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும். இவை தவிர, புற்று நோயாளிகள் பயன்பெறும் வகையில், மேலும் மூன்று மருந்துகளுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகள் குறையும்.

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி, 15% லிருந்து 6% ஆகக் குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை குறைந்திருக்கிறது. இதன் மூலம், நடுத்தர குடும்பத்தினர் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு, ரூ. 20.99 லட்சம் கோடியிலிருந்து, ரூ.23.49 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த 2019 - 20 ஆண்டில், சுமார் ரூ.11.45 லட்சம் கோடியாக இருந்த இந்த பங்கீடு, ஐந்து ஆண்டுகளில், இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்திருப்பது மத்திய அரசின் மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றாகும். இதன் மூலம், தமிழ்நாடும் பெரும் பலனடையும். தமிழ்நாடு முதலமைச்சர் மு..க. ஸ்டாலின் இந்த வரிப் பங்கீட்டை, தமிழ்நாடு நலனுக்காக முறையாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஒட்டுமொத்தமாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு முதல், ஒவ்வொரு துறையின் வளர்ச்சியையும் கவனமாகக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினருக்குமான மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. வரும் 2047 ஆம் ஆண்டிற்குள், உலக அரங்கில் முதன்மை நாடாக, நமது நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்ற, பிரதமரின் குறிக்கோளை நோக்கிய இந்த நிதிநிலை அறிக்கையை, தமிழ்நாடு பாஜக சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு, மிகச் சிறந்த நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
#budgetsession#financeministerAnnamalaiBudget 2024Budget 2024-25IndialoksabhaLokSabha2024NarendramodiNDAGovtNirmalaSitharamanparliamentPMOIndiarajyasabhaTamilNaduUnionBudget
Advertisement
Next Article