"வறுமையை முற்றிலும் ஒழிக்க பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளது" - பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. 2024-25 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மத்திய பட்ஜெட் 2024-25 : விலை குறையும் மற்றும் விலை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியல்!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"மக்களவையில் இன்று மக்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும். நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் அதிகாரம் பெறவும் பட்ஜெட் வழிவகுக்கும்.அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை உலக அளவிலான உற்பத்தி மையமாக மாற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.
மேலும், பட்ஜெட்டில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரையும் புதிய தொழில் முனைவோராக மாற்றும் வகையில் பட்ஜெட்டில் சிறப்பம்சங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினரை மேம்படுத்தும்வகையிலும், இளைஞர்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் உள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு இரண்டுக்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு, மத்திய பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளது"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.