“குண்டுகளை வீசியவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்” - ஆளுநர் மாளிகை விளக்கம்
பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு இன்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
இதையும் படியுங்கள் : எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! - அமைச்சர் உதயநிதி பேட்டி
இந்நிலையில் இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள ஆளுநர் மாளிகை தனது X தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று பதிவிட்டுள்ளது.