பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாஸ்கோவை அணுகிய டெல்லி போலீசார்!
டெல்லியில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பப்பட்ட முகவரி குறித்த விவரங்களை பெற டெல்லி போலீசார் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள தேசிய மத்திய பணியகத்தை (என்சிபி) அணுகியுள்ளனர்.
டெல்லியில் நேற்று (மே. 1) காலை பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக உடனடியாக பெற்றோர்கள் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில், குழந்தைகள் அவசர அவசரமாக பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு குழு மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளிகளுக்கு போலியான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரஷ்யாவில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரே ஐபி முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்தது. இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, "ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஒரு டொமைன் ஐடியான ‘sawariim@mail.ru’ இலிருந்து அச்சுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பயனரின் சொந்த ஐபி (இன்டர்நெட் புரோட்டோகால்) முகவரி மறைக்கப்பட்டுள்ளது. IP முகவரிகள் VPN உடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
எனவே, மின்னஞ்சல் அனுப்பிய நபரின் இணைப்பை கண்டறிவது சவாலாக இருக்கும். மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு செய்த நபரின் விவரங்களைக் கோரி, டெமி அதிகாரப்பூர்வ (டிஓ) கடிதத்தை அனுப்புவதன் மூலம் இன்டர்போலின் உதவியை நாடுவோம். எங்களுக்கு உதவ ரஷ்ய நிறுவனத்தையும் நாங்கள் அணுகுவோம்”என தெரிவித்தார்.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க மின்னஞ்சல் முகவரி உருவாக்கிய நபரின் விவரங்களை பெற, டெல்லி போலீசார் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள தேசிய மத்திய பணியகத்தை (என்சிபி) அணுகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது,
“அனைத்து தகவல்களும் இன்டர்போல் மூலம் NCB ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பதிவு செய்தவரின் பெயர், முகவரி தொடர்பு விவரங்கள், மாற்று மின்னஞ்சல் ஐடிகள் மற்றும் முழுமையான ஐடி பதிவுகள் போன்ற விவரங்களைக் கேட்டுள்ளோம். அவர்களின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் ” என தெரிவித்தார்.