ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் சர்தா என்ற ஆறு அமைந்துள்ளது. ஹோலி கொண்டாட்டத்தின் போது நேற்று (மார்ச் 14) இந்த ஆற்றில் மூழ்கி தினேஷ் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் அவரது உடலை இன்று (மார்ச் 15) இறுதிச் சடங்கிற்காக எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு படகில் சில குடும்ப உறுப்பினர்களும், உயிரிழந்த இளைஞரின் உடலும் கொண்டுச் செல்லப்பட்டது. மற்றொரு படகில் குடும்ப உறுப்பினர்கள் 16 பேர் பயணித்தனர்.
இளைஞரின் உடலை எடுத்துச் சென்ற படகு கரையை அடைந்தது. மற்றொரு படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. படகில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 வயது குழந்தை உள்பட 13 பேர் உயிருடனும், 3 பேர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். அதில் 2 வயது குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட்டது. மீட்கப்பட்ட மற்ற 12 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சஞ்சய் (32), குஷ்பூ (30) மற்றும் கும்கம் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.