Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவின் ‘Magic' வியூகம்.. புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. 2024 தேர்தல் கணக்கு என்ன?

08:48 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்னும் பின்னனுமான, பாஜகவின் வியூகம்... அடுத்து என்ன என்கிற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்....

Advertisement

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இது, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாக இந்த தேர்தல்கள் பார்க்கப்பட்டன. இதில், மத்திய பிரதேசம் தவிர்த்த 4 மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம், சத்திஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்துள்ளன. தென்னிந்தியாவில் கர்நாடகத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் இளம் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகியுள்ளார்.

வடக்கில் பாஜக - தெற்கில் காங்கிரஸ்

தெலங்கானாவில், நிரந்தர முதலமைச்சராக அக்கட்சியினரால் கருதப்பட்ட சந்திரசேகர் ராவை மட்டுமல்ல பாஜகவிற்கும் அதிர்ச்சி அளித்துள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வரை பாரத் ராஷ்ட்ர சமீதி - பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடையில்தான் போட்டி என்கிற தோற்றம் இருந்தது. இதை காங்கிரஸ் கட்சியின் வியூகம் முறியடித்து, வெற்றி கண்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் எளிதில் ஆட்சியமைக்கும் என்று கருதப்பட்ட சத்தீஸ்கர், குறைந்து இடங்கள் வித்தியாசத்தில் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்திலுல் அதிர்ச்சித் தோல்வியைக் கண்டுள்ளது காங்கிரஸ். இந்த முடிவுகளால், தெற்கு காங்கிரஸுக்கு கை நீட்டியுள்ளது. வடக்கு தாமரையைத் தாங்கிப் பிடிக்கிறது என்கிற தோற்றம் உருவாகியுள்ளது.

சத்தீஸ்கரில் மீண்டும் மலர்ந்த தாமரை

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல, தேர்தலுக்கு பிந்தைய பாஜக-வின் வியூகங்களும் கவனத்திற்குள்ளாகியுள்ளன. இதன்படி, சத்தீஸ்கரில் 3 முறை முதமைச்சராக இருந்த ரமன் சிங் மீண்டும் முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சியின் முகமாகவும் அவர் பார்க்கப்பட்ட நிலையில், விஷ்னு தியோ சாய் முதலமைச்சராகியுள்ளார். பட்டியல் பழங்குடி வகுப்பைப் சேர்ந்த அவருடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC), சேர்ந்த அருண் சாஹூ, முற்பட்ட வகுப்பைச் சார்ந்த விஜய் சர்மா ஆகிய இருவரும் துணை முதலமைச்சராகியுள்ளனர்.

மாமாஜியைத் தவிர்த்த ம.பி

இந்தி பேசும் மாநிலங்களில் முக்கிய மாநிலமான மத்திய பிரதேசத்தில் 4 முறை முதலமைச்சராக இருந்து, ஆட்சியைத் தக்க வைத்த சிவராஜ் சிங் சவுகானே மீண்டும் முதலமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கபட்டது. கட்சியினர் கடந்த செல்வாக்கால் அவரை மாமாஜி என்றே பலரும் அழைக்கின்றனர். கட்சியின் மாநில முகமாகவும் அவர் இருப்பதாக கூறப்படும் நிலையில், சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ் முதலமைச்சராகியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவருடன், எஸ்.சி வகுப்பைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்டா, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ராஜேந்திர சுக்லா ஆகிய இருவரும் துணை முதலமைச்சராகியுள்ளனர்.

ராணிக்கு இல்லை தலைப்பாகை

தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் ராஜஸ்தான் முதலமைச்சர் யார்? என்பதில் இழுபறியாக இருந்தது. அரச குடும்பத்தைச் சார்ந்த, 2 முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தானில் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பெரும்பங்கு வகித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார் என்று சொல்லப்பட்டது. ஆனால், முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ள பஜன்லால் சர்மா முதலமைச்சராகியுள்ளார். முற்பட்ட வகுப்பினரான அவருடன் அரச குடும்பத்தைச் சேர்ந்த, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தியா குமாரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினரான பிரேம் சந்த் பைரவா ஆகிய இருவரும் துணை முதலமைச்சராகியுள்ளனர்.

முதலமைச்சர் தேர்வின் பின்னணி

முதலமைச்சராகியுள்ள மூவரும் 60 வயதிற்குட்பட்டவர்கள், கட்சிப் பணியில் தீவிரம் காட்டியவர்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. ’’இது எல்லாமே ஒரு கணக்கோடு, வரும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் என்கிறார்கள். OBC இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை 2024 தேர்தலில் பேசு பொருளாகும், என்பதை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள அரசியல் முடிவு’’ என்கிறார்கள்.

குறிப்பாக ’’சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் வாக்குகளை கவரும் வகையிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகளையும், தங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் முற்பட்ட வகுப்பினர் வாக்குகளை தக்க வைக்கவும்... என பாஜகவின் திட்டமிட்ட காய் நகர்த்தல்கள்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு படிப்பினை?

அதேநேரத்தில் 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் காங்கிரஸ்க்கும் பாடத்தை கொடுத்துள்ளது என்கிறார்கள். குறிப்பாக, "I.N.D.I.A கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்குள் கொஞ்சம், விட்டுக் கொடுத்திருந்தால், நிறைய பெற்றிருக்கலாம். அவர்களின் பெரியண்ணன் தனமும் தோல்விக்கான காரணம்’’ என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கமல்நாத், அசோக் கெலாட், பூபேஷ் பாகல் உள்ளிட்ட மூத்தவர்கள் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்க, ஆட்சியமைய காரணமானவர்களாக இருந்தாலும் அவர்களைத் தவிர்த்து விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது பாஜக. இந்த முடிவை கடைசி நொடி வரை வெளியில் கசியாமலும் ரகசியம் காத்துள்ளனர். மாநிலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களை விட கட்சி மற்றும் மோடியின் முகமே பிரதானம் என்பதையும் இது காட்டுகிறது. இப்படி பாஜகவின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் ஆச்சரியமாகியுள்ளன என்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு... சமூக ரீதியிலான வாக்குகளை கவரும் காய் நகர்த்தல்கள்... இவையெல்லாம் 2024-ம் ஆண்டிலும் பாஜகவிற்கு பலனளிக்குமா...? தொடர் படிப்பினை, நீண்ட அனுபவம் உள்ள காங்கிரஸ் உத்வேகம் பெறுமா...? கூட்டணிக் கட்சிகளிடம் அணுகுமுறை மாறுமா...? 2024-ம் ஆண்டு யாருக்கு வெற்றி...? யார் வியூகம் வெல்லும்...? பொருத்திருந்து பார்க்கலாம்...

Tags :
Bhajanlal SharmaBJPChhattisgarhCHIEF MINISTERCongressMadhya pradeshMizoramMohan YadavNews7Tamilnews7TamilUpdatesRajasthanTelanaganaVishnu Dev Sai
Advertisement
Next Article