ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக!
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் 24 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கை பின்தள்ளி பாஜக 80 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. இதில் அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் கடந்த 2-ம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும், சிக்கிமில் எஸ்கேஎம்மும் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டன.
இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் 147 சட்டமன்றத் தொகுதிகளும், 21 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த கட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் முக்கிய பொறுப்பில் வகித்து வருகிறார். இந்த மாநிலத்தில் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டமாக மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.
ஒடிசாவில் ஆட்சியமைக்க தேவையான 73 தொகுதிகள். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்கை பின்னுக்குத் தள்ளி, பாஜக 80 இடங்களிலும், நவின் பட்நாயக்கின் பிஜேடி 49 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் 3 இடத்திலும் முன்னணியில் உள்ளன.
எனவே, பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.