பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் – அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை!
சென்னை கோட்டூர்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி பெண் நிர்வாகி ஆண்டாள்
தாக்கப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள். இவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார். .ஜன.19-ம் தேதி பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஆட்களை அழைத்து வருவதில் ஆண்டாளுக்கும், பாஜக மகளிர் அணி மண்டல தலைவரான நிவேதாவுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜன.21-ம் தேதி இரவு 8 மணி அளவில், அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநராக பணிபுரியும் ஶ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி ஆகியோர் ஆண்டாள் வீட்டிற்கு நுழைந்துள்ளனர். மேலும், அமர் பிரசாத் ரெட்டிதான் உங்களை அடிக்க சொன்னார் எனவும், அமர் பிரசாத் ரெட்டியிடம் வாங்கிய பணத்தில் எங்களுக்கு பணம் வேண்டும் எனவும் கூறி, ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவியை தாக்கியுள்ளனர்.
மேலும் ஸ்ரீதர் என்பவர் அவர் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து காட்டி ஆபாசமாக பேசியுள்ளார். தொடர்ந்து, பணத்தில் பங்கு தரவில்லை என்றால் குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஆண்டாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படியுங்கள்: குளியலறையில் ரகசிய கேமரா – மருத்துவ மாணவர் கைது!
இந்த புகாரை அடுத்து, பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சைதாப்பேட்டை கிழக்கு மண்டல் பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குப்பதிவை தொடர்ந்து, சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி அமர்பிரசாத்
ரெட்டியை பிடிக்க கோட்டூர்புரம் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டியின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கார் மூலமாக அவர் ஆந்திராவிற்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர். ஆந்திரா போலீசார் உதவியோடு
அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.