1998-ல் இருந்து வதோதராவில் தோல்வியே காணாத பாஜக - குஜராத் தேர்தல் களத்தில் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குஜராத் வதோதரா தொகுதியில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ். நமது செய்தியாளர் சேகரித்த பிரத்யேக தகவல்களை காணலாம்….
தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத்துடன், கோவா, அசாம், பீகார், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என மொத்தம் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 லோக்சசபா தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது. காங்கிரஸ் 24 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 3-ம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலங்களில் குஜராத்துக்கே முதலிடம் என கூறலாம். இங்கு 1989-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 9 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவே அதிக இடங்களை பிடித்துள்ளது. 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 15 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றன. 2014, 2019-ம் ஆண்டுகளில் அனைத்து 26 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. சட்டப்பேரவையை பொருத்தவரை 1998-ம் ஆண்டிலிருந்தே பாஜக ஆட்சி குஜராத்தில் நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் எஞ்சிய தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ள சி.ஆர்.பாட்டீல் வதோதராவில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குஜராத்தின் வதோதரா தொகுதியில் பாஜகவின் நிலை என்ன? எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் நிலை என்ன? மக்களின் ஆதரவு யாருக்கு? போன்ற விவரங்களை அறிந்துகொள்ள நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி கள ஆய்வு செய்துள்ளார்.