“கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புகிறது” - காங். குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புவதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அஜய் மாக்கன் குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்களவை தேர்தல் பரபரப்பான சூழலில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக காங்கிரஸ் மீண்டும் நரேந்திர மோடி அரசாங்கத்தை குறிவைத்துள்ளது . கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் அஜய் மாக்கன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும் போது பாஜகவை கடுமையாக தாக்கி பேசினர்.
எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்பட்டு காங்கிரஸை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஜய் மாக்கன் குற்றம்சாட்டினார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவை குறிவைத்த ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8150 கோடி பணத்தை திரட்டியுள்ளதாக கூறினார்.
இதற்கு நான்கு வகையான நடவடிக்கைகளை பா.ஜ.க கடைபிடித்துளது.
1) ப்ரீபெய்டு லஞ்சம்,
2) போஸ்ட்பெய்டு லஞ்சம்,
3) அமலக்கத்துறை, சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி மிரட்டி பணம் பறித்தல்,
4) ஷெல் நிறுவனங்களை ஏற்படுத்தல் என நான்கு வகையான நடவடிக்கைகளை பா.ஜ.க கடைபிடித்துளது.
வரி பயங்கரவாதத்தை பாஜக செய்துள்ளது...
வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் கட்சியை நிதிரீதியாக பலவீனப்படுத்த பாஜக விரும்புகிறது. பாஜக வரிப் பயங்கரவாதத்தை செய்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அஜய் மக்கன் கூறுகையில், “காங்கிரஸுக்கு ரூ.1,823 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றம் செல்லும்...
இந்த வருமான வரி நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அடுத்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்றும் மக்கன் கூறினார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளின்படி பாஜக பெற்ற நிதியை மதிப்பீடு செய்ய வேண்டும். 2017-18-ம் நிதியாண்டு முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான வருமான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக காங்கிரஸுக்கு வருமான வரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மாக்கன் கூறினார்.