“காணாமல் போகும் கட்சிகள் விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றன” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்
மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சுத்தன் உலகத் தொழில் முனைவோருக்கான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடர்பாக சிறப்புரை ஆற்றினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
“ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை தானமாக கொடுத்திருக்க கூடாது. அவரின் இருக்கைக்காக பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் எனக்கு இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் இருக்கையில் இருந்து எழுந்த முழு வீடியோ தெளிவாக இருக்கிறது.
அந்த இருக்கையில் உதயநிதி ஸ்டாலின் மகனின் நண்பர் உட்கார்ந்திருப்பது தெளிவாக இருக்கிறது. நியாயப்படி மாவட்ட ஆட்சியர், உதயநிதி ஸ்டாலினுக்கும் மூர்த்திக்கும் இடையில் அமர்ந்திருக்க வேண்டும் . ஆனால் அதில் உதயநிதி ஸ்டாலின் மகன் உட்கார்ந்திருந்தார். மாவட்ட ஆட்சியர் தனது இருக்கையை விட்டுக்கொடுத்தது மாபெரும் தவறு. அதிகாரிகள் தன்மானத்தை விட்டுக்கொடுக்க கூடாது.
சமீபத்தில் ஒரு திராவிடக் கட்சித் தலைவர் விஜயை கூட்டணிக்கு அழைத்தார். எந்த கட்சி எல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் விஜயை கூட்டணிக்கு அழைக்கின்றனர். விஜய் மீது வைக்கும் நம்பிக்கையில் 10% ராகுல் காந்தி மீது செல்வப்பெருந்தகை வைக்க வேண்டும். இதே மதுரையில் செல்லூர் ராஜூ விஜயை கூட்டணிக்கு அழைத்தார். அதே வேலையைத்தான் செல்வப்பெருந்தகை செய்துள்ளார்.
பாஜக இதுபோல யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் வளர்ந்து வருகிறோம். இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். அரசியலில் காமராஜரைப் போல் எளிமையாக மக்களை சென்று பார்ப்பதைத்தான் பார்த்துள்ளேன். விஜய் பரந்தூர் மக்களைச் சந்திக்க காவலர்களிடம் அனுமதி கேட்டிருப்பதை புதுமையாகப் பார்க்கிறேன்”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.