“ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக ஆட்சி” - அண்ணாமலை பேச்சு!
ஏழை என்ற ஜாதி இருக்கக் கூடாது என்பதற்காக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது, ஒன்பது ஆண்டு ஆட்சியில், ஒரு பைசா திருடி விட்டார் என்று குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
”இந்தியாவில் பாஜக கட்சி வீடற்றவர்களுக்கு நான்கு கோடி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. யாரும் குடிசை வீட்டில் இருக்கக் கூடாது, கான்கிரீட் வீடுகளில் செல்ல வேண்டுமென மோடி நினைக்கிறார். மோடி ஆட்சிக்கு வரும்போது 67% வீடுகளில் மட்டுமே கேஸ் அடுப்புகள் இருந்த நிலையில் தற்போது 99.9% வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான ஆட்சியை மோடி நடத்தி வருகிறார். 6000 ரூபாய் விவசாயிகளுக்கு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தியாவில் கடைசி ஏழைகள் இருக்கும் வரை பாரதிய ஜனதா கட்சி இருக்கும் என கட்சி ஆரம்பிக்கும் போது தெரிவித்தார்கள். தற்போது திரும்பி பார்த்தாலும் அந்த இலக்கு எட்டப்படவில்லை. இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. திமுக ஐந்து முறை முதலமைச்சராக இருந்து செய்ய முடியாததை மோடி செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் மட்டும் 56 லட்சம் கழிப்பறைகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது.
ஏழைத் தாய்மார்களின் வயிற்றிலிருந்து பிறந்த பெண்கள் இந்தியாவில் ஆட்சியாளராக வரவேண்டும் என்பதற்காக 33% இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக நீதி, சமூக நீதி என திமுக பேசுகிறார்கள். ஆரம்ப கால கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தம் நன்றாகத்தான் இருந்தது. கூட்டணி கட்சியாக இருந்ததற்கு திமுக கணக்கிலிருந்து கம்யூனிஸ்ட் காரர்களுக்கு 25 கோடி ரூபாய் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.