For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
07:21 PM Apr 22, 2025 IST | Web Editor
“தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்”   நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆதித்தமிழர் கட்சியினர் தமிழ்நாடு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததற்கு கண்டம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி திமுக-வின் ஆதரவு அமைப்பான ஆதித்தமிழர் கட்சியினர் நமது  பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்நாடு பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இஸ்லாமிய சகோதரிகளின் உரிமைகளையும் இஸ்லாமிய மக்களின் நலனையும் ஒருசேரப் பாதுகாக்கும் இச்சட்டத்தை முழு மனதோடு ஆதரிப்பதாக நாட்டின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய சமூகங்களைச் சார்ந்த மக்களும், இச்சட்டத்தின் திருத்தங்களைப் படித்து தெளிவுபெற்ற அறிஞர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். இவ்வேளையில், திமுக அரசின் நிழலில் இருக்கும் ஒரு சில அமைப்புகளுக்கு இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் தைரியம் எங்கிருந்து வந்தது? ஒருவேளை ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், திமுக அரசே ஆதித்தமிழர் கட்சியினரைத் தூண்டிவிட்டு, இன்று இந்த போராட்டம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.

காரணம், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும், பாராளுமன்றத்திலும் பல மணி நேரம் விவாதம் நடைபெற்ற பிறகே வக்ஃப் திருத்த மசோதாவானது சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற திடீர் போராட்டங்களும் அதில் நமது  பிரதமரின் உருவப்படங்கள் எரிக்கும் வன்முறைகளும் எதற்கு? இதுபோன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு பதற்ற சூழலை உண்டாக்குவதோடு சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

எனவே, தமிழ்நாடு மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் இனியும் நடக்காமல் தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாஜக அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதோடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு,க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement