கெஜ்ரிவால் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினர்... கைது செய்த போலீசார்!
அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 150 நாள்கள் திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர், டெல்லியின் முதலமைச்சராக அமைச்சர் அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக இருந்த அதிகாரபூர்வ பங்களாவில், “ஆடம்பரமான” பொருட்களுக்கான நிதி ஆதாரம் குறித்து பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. முதலமைச்சரின் பங்களாவிற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படவில்லை என பொதுப்பணித் துறையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எப்படி வாங்கப்பட்டது என்று பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இவை பஞ்சாப் அரசிடமிருந்து வந்ததா? மதுபான ஊழல் அல்லது டெல்லி ஜல் போர்டு ஊழல் மூலம் வந்ததா? என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடுமையாக சாடியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. பாஜக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, “நேர்மையான அரவிந்த் கெஜ்ரிவாலை இழிவுபடுத்த பாஜக இதுபோன்ற தந்திரங்களை செய்து வருகிறது. ஆனால் டெல்லி மக்கள் அவர்களின் தவறான குற்றச்சாட்டுகளை அறிந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தங்கள் பங்களாக்கள் மற்றும் சலுகைகளை தரவாக பயன்படுத்தும் தலைவர்களைப் போலல்லாமல், தேவையான அனைத்து அரசியலமைப்பு விதிமுறைகளையும் பின்பற்றி டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்வதன் மூலம் கெஜ்ரிவால் ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவினர் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை கைவிட போலீசார் அறிவுறுத்திய நிலையில், பாஜகவினர் அதை கேட்கவில்லை. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.