For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி போராட்டம்!

01:50 PM Mar 22, 2025 IST | Web Editor
திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி போராட்டம்
Advertisement

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில், திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை பனையூர் பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டார். பாஜக முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அவர் கூறியதாவது,

"மேகதாது அணை, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழ்நாட்டின் சம்மதம் தேவையில்லை, அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் D.K சிவக்குமாருக்குத்தான் வாழிய பாடி வரவேற்கிறது தமிழ்நாடு அரசு. முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு.

பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட, தமிழ்நாட்டு வல்லுநர்களை அனுமதிப்பதில்லை. தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்னை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழ்நாட்டில் கோவை, திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன.

அரிசி, பருப்பு, காய்கறிகள் என தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது, மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட, நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள நாய்களைக் கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள்.

இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி, தமிழ்நாட்டை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்.
தனது இந்தி கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து, நாளை (இன்று) தமிழ்நாடு பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு பாஜக உறுப்பினர்கள் அனைவரும், நாளை (இன்று) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags :
Advertisement