“கார்ப்பரேட்டுகளின் அரசாக பாஜக செயல்படுகிறது” - துரை வைகோ குற்றச்சாட்டு!
“கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை மத்திய பாஜக அரசு ரத்து செய்கிறது.
ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய மறுக்கிறது” என துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைமையிலான இந்திய கூட்டணி சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவஸ்தானம், பெட்டாத்தலை பேருந்து நிறுத்தம், கடை வீதி, சிறுகமணி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது துரை வைகோ பேசியதாவது:
அனைத்து தரப்பினரும் எளிதில் சந்திக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினராக
இருப்பேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கீழ் 100 நாட்கள் வழங்கப்பட வேண்டிய வேலை தற்போது 50 நாட்கள் கூட சரிவர வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு. இந்த நிலைமை மாற வேண்டும். கிராமத்தில் உள்ள பல்வேறு மக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையே நம்பி உள்ளனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கப்படுவதில்லை. அதற்கான நிதியையும் மத்திய பாஜக அரசு ஒதுக்குவதில்லை.
இதனால் தான் மத்திய பாஜக அரசை நாம் அகற்ற வேண்டும் என நம் முதலமைச்சர் கூறி
வருகிறார். இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்த உடன் 100 நாள் வேலைவாய்ப்பை 150 நாளாக உயர்த்தி தருவதாக நம் முதலமைச்சர் கூறியுள்ளார். ஊதியத்தை 400 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய 15 லட்சம் கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு ரத்து செய்கிறது. ஆனால், விவசாயிகள் வாங்கிய 75 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்ய மறுக்கிறது. இது கார்ப்பரேட்டுகளின் அரசாக செயல்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை தற்போது 1.15 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. தேர்தல் முடிந்த பின்பு விடுப்பட்ட பெண்களுக்கும் வழங்கப்படும்”
இவ்வாறு மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.