"அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சிக்கிறது" - திருமாவளவன் பேட்டி!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "குடியரசு துணை தலைவராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதே வெற்றி பெறுவார் என தெரியும். ஆனால் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஒற்றுமையாக சுதர்சன் ரெட்டிக்கு வாக்களித்தோம். 752 வாக்குக்ளில் 300 வாக்குகள் கிடைத்து உள்ளன. இந்தியா கூட்டணி கட்டு கோப்பாக இருப்பதற்கு இந்த தேர்தல் சான்றாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.பாசறையில் வளர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைக்கிறோம், வாழ்த்துகிறோம். சி.பி.ராதாகிருஷ்ணன் அம்பேத்கார் மீது மதிப்புள்ளவர். அந்த வகையில் அம்பேத்கார் எழுதிய சட்டத்தை பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் செயல்பட வாழ்த்துகிறேன். ஏற்கனவே என்னுடைய ஐயத்தை சொல்லி இருந்தேன். செங்கேட்டையன் தன்னிச்சையாக போராடுகிறார் என்றால் வாழ்த்த கடமைப்பட்டு உள்ளோம். ஆனால் பாஜக இயக்குகிறது என்றால் அதிமுகவிற்கு நல்லதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்களுக்கு என்மீது கோபம் வந்தது. அதிமுகவை தனியாக போக விடாமல் கூட்டணியில் இணைத்தாலும் தனித்து செயல்பட விடாமல் அதை சிதைக்கின்ற கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதை அதிமுக தொண்டர்கள் உணர தொடங்கி இருப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை அமித்ஷா, நிர்மலா சீத்தாராமன் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள் என்று கேள்வி எழுகிறது. அதிமுக, அதன் தலைவர் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். அதிமுகவை எப்படி நடத்துகிறார் என்பதை நாட்டு மக்கள் அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலும் பாஜகவுடன் தான் கூட்டணி என அதிமுக இருந்தால் தொண்டர்களே பதில் சொல்வார்கள்.
விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி மறுத்து இருந்தால் ஏற்புடைதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அந்த வகையில் விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அமைதி மறுப்பதற்கான காரணம் என்ன தெரியவில்லை. அதன் பின்னர் உரிய பதில் சொல்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பில் கவனம் செலுத்துகிறோம். 22 ஆயிரம் பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
அதன் பின்னர் தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் குறித்து திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் சுற்றுப்பயணத்திற்கு இப்போதே திட்டமிட்டு உள்ளனர். உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அவசியமில்லை. கட்டாயம் இல்லை. கட்சியின் கட்டமைப்பை உறுதி செய்து பின் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.