“மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான்” - அண்ணாமலை பேட்டி!
மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பாஜக எனவும், தமிழ்நாட்டில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கியுள்ளதாகவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
“மூத்த நடிகர்கள் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என கட்சியை ஆரம்பிக்கிறார்கள். கமல்ஹாசன் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை. கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. கமல்ஹாசன் எங்கு செல்ல வேண்டும் என்பது அவரது முடிவு. திமுகவிற்கு மாற்றாக மய்யம் இருக்கும் என தன்னை நம்பி வந்த தொண்டர்களை கைவிட்டு திமுகவில் கைகோர்த்தார் கமல்ஹாசன்.
மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கான ஒரே கட்சி பாஜக தான். தமிழ்நாட்டில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கியுள்ளது. கமல்ஹாசனுக்கு இருக்கக்கூடிய நிர்பந்தம், அவர் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். இப்போது நடந்துள்ளது. கமல்ஹாசன் திமுகவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது.
நடிகர்கள் அவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? சாமானியவர்களா? ரோட்டில் மக்கள் பிரச்னையை பார்க்கின்றவர்களா? எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேசணும் என்பதிலிருந்து வெளியே வரவேண்டும். அவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நடிகர்களின் நிலைமை அரசியல் சார்பாக உள்ளது.
மாமனா மச்சானா அவர் ஏன் ரிசைன் பண்ணினார் என்று அவர்கிட்ட தான் கேட்கணும்.
அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு. 2026 முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும். என்னுடைய குறிப்பு முழு நேரம் இருந்தால் மட்டுமே சாத்தியம். கோயம்புத்தூரில் வளர்ச்சி குறைந்துள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விவரம் கிடையாது.
தேர்தலுக்கு நாங்கள் எப்போதோ தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கூட்டணி கட்சிகள் இருக்கக்கூடிய மாநிலத்திலிருந்து பாஜகவின் லிஸ்ட் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருப்பூர், கோவையில் வளர்ச்சி பிரச்னை உள்ளது. திருப்பூரின் வளர்ச்சியில் இன்னும் வேகப்படுத்த வேண்டும். இங்க இருக்கக்கூடிய எம்பிக்கள் நான்கு வழி சாலை வேண்டாம் என்கிறார்கள். பின்னர் நாடு எப்படி வளர்ச்சி அடையும்.
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் வழக்கு மீது யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்களை கண்டுபிடித்து மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதை என்சிபி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.