"பாஜக என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறது" - அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 25 கோடி மதிப்பிலான ஊரக பகுதிகளுக்கான சாலை பணிகள் மற்றும் 916 படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாஜகவை விட ஊழல்வாதிகள் யாரும் இல்லை.
ஏனென்றால் இரண்டு மூன்று வருடங்களில் அம்பானியின் சொத்து எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று நாம் பார்க்கிறோம். ரஷ்யாவில் இருந்து அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய்யை வாங்கி வந்து இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் விதத்தில் உயர்ந்த விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கின்ற ஒரு ஊழலை செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.
ஆனால் ஈடியும் ஐடியும் கையில் வைத்துக்கொண்டு எதிர்கட்சிகள் ஊழல் கட்சிகள் போன்று ஒரு பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றனர். நாம் பார்க்கின்றோம், எத்தனை வழக்குகளில் இவர்கள் பல அப்பாவிகளை கைது செய்து சிறையில் போட்டு மாதங்கள், ஆண்டுகள் கணக்கில் பிறகு குற்ற மற்றவர்கள் என விடுதலை செய்வதை பார்க்கின்றோம்.
UAPA சட்டம் மற்றும் ஈடி போன்ற அமைப்புகளை கையில் வைத்துக் கண்டு ஜனநாயக அமைப்புகளை பாஜக அரசு எவ்வாறு ஒடுக்க நினைக்கிறதோ அதே போன்றுதான் இந்தச் சட்டத்தின் மூலம் ஒடுக்கும். இதனால் தான் பதவி பறிப்பு சட்டத்தை எதிர்க்கிறோம். கடந்த ஆட்சியில் சாலை, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியதில் என் மீதும் சக எம்எல்ஏக்கள் மீதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை, பித்தம் தலைக்கேறிய குரங்கு ஒன்று பனையேறி கள்ளை குடித்ததாம், அப்போது போதை தலைக்கேறியதாம், போதை, பித்தம், கடும் தேள் கொட்டிய விஷம் மூன்றும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தாம் அதே போன்று தான் இன்று பாஜக என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறான். அதன் வெளிப்பாடு தான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றார் என்ற உண்மையை கூட தெரியாமல் அனுமார் சென்றார் என்று சொல்லியிருக்கிறார்.
இது உண்மையிலே அடுத்த தலைமுறை விஞ்ஞானம் ரீதியான விஷயங்களை மதிக்க வேண்டும் என்று இருக்கின்ற அரசியலமைப்பு சட்டத்தின் சரத்தை மீற கூடிய ஒரு செயல். இது இளம் தலைமுறையை தவறான பாதைக்கு வழி நடத்தும் ஒரு செயல். இதை கண்டிக்க கூடிய செயல்" என்று தெரிவித்துள்ளார்.