“சீமான் பேச்சுக்கு பின்னால் பாஜக இல்லை” - டிடிவி தினகரன்!
திருநெல்வேலியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் வர வாய்ப்பு உள்ளது. அவரின் தொண்டர்கள் ஒரே அணியில் வருவார்கள் என்பது எனது நம்பிக்கை. உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். திமுக வெற்றிபெற இரட்டை இலை மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதி நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பட்டியில் அடைத்து அனைவரின் மீது வழக்குப் பதிவு செய்து, எதிர்கட்சிகளை செயல்பட விடாமல் ஆளும் கட்சி செய்கிறது. தேசிய ஜனநாயக கட்சி போட்டியிட வேண்டும் என்பது எங்கள் ஆசை. தற்போது அண்ணாமலையின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு.
முதலமைச்சர் தனது ஆசையை சொல்கிறார். மக்கள் அப்படி நினைக்கவில்லை. எதிர்கட்சிகள் ஜனநாயக ரீதியான போராட்டம் நடத்தகூட அனுமதிக்கவில்லை. ஒரு லட்சம் போராட்டம் நடத்துவதாக அரசு சொல்கிறது. இது அவர்கள் கட்சிக்கு மட்டும் வழங்கிய அனுமதியாகும். 2026ல் ஆளும் கட்சியை மக்கள் புறக்கணிப்பது உறுதி. இடைத்தேர்தல் வெற்றி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு வெற்றியாக அமைந்தது இல்லை.
ஆளும் கட்சி தேர்தலை சரியாக நடத்தாது என்பது அனைவருக்கும் தெரிந்தது. மினி எமர்ஜென்சி நடக்கிறது. பல அமைச்சர்கள் மீது வழக்கு இருந்தும் பழனிசாமி மீது வழக்கு இதுவரை இல்லை. அவரை காப்பாற்றிகொள்ள கட்சி அழிந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். மக்களை ஏமாற்றி வெற்றி பெறலாம் என முதலமைச்சர் நினைக்கிறார்.
ஆளுநர் அவரது அதிகார வரம்புக்குட்பட்டு செயல்பட வேண்டும். ஆளுநருக்குண்டான மரியாதையை ஆளும் கட்சியும் வழங்க வேண்டும். ஆளும் கட்சி அவர்களது இயலாமையை மறைக்கவே மத்திய அரசை குறை சொல்கிறார்கள். ஆளுநர் பதவி தேவையில்லை என்ற நினைத்த காலம் போய், ஆளும் கட்சியின் காட்டாச்சியை கட்டுபடுத்த ஆளுநர் பதவி தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக தலைமையில் தான் உள்ளது. பாஜகவை மக்கள் ஏற்றுகொண்டுள்ளதால் தான் நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ வந்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி சாத்தியமாகும். மேற்கு வங்காளத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த கம்யூனிஸ்ட் இப்போது இருக்கும் நிலை பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் பாஜகவை மதம் சார்ந்த கட்சி என சொல்லி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. முதல்வர் ஸ்டாலினும் ஒரு மதத்திற்கு எதிரானவராகத்தான் உள்ளார். கருப்பு கொடி காட்டிய முதல்வர் பிரதமரை வாங்க வாங்க என வரவேற்று கொண்டுதான் இருக்கிறார். சீமான் பெரியார் குறித்து பேசியது கண்டனத்திற்குறியது.
சீமான் பேச்சுக்கு பின்னால் பாஜக இல்லை. இந்த ஆட்சி சகிப்பு தன்மை இல்லாத நிலையில் உள்ளது. திமுகவை எதிர்த்தால் சிறையில் பிடித்து போடுவதுதான் திராவிட மாடல். திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த திமுக கொள்கைக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும். கூலிப்படை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதல்வர் குடும்பத்தை தவிர்த்து பிற குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சரியில்லாத நிலை உள்ளது” என தெரிவித்தார்.