“ஐனநாயகத்தை காப்பாற்ற மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும்” - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
ஐனநாயகத்தை காப்பாற்ற மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றியதாவது :
“மகளிர்க்கு உரிமைத்தொகை, ஆண்டுக்கு 8 லட்சம் வீடுகள் என முதல்வரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே இருக்கலாம். சாதனைகளை மறைக்கும் விதமாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நமது உரிமைகளை அடகு வைத்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மோடி அரசின் திட்டம் என பெயர் வைத்துக் கொள்கிறது பாஜக அரசு. மத்திய அரசின் நிதியை எதிர்பார்க்காமல் தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அரசு மத்திய பாஜக அரசு. இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து விடக்கூடாது.
ஐனநாயகத்தை காப்பாற்ற பாஜக அரசை அகற்ற வேண்டும். திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் அழிந்த வரலாறு உண்டு. தமிழ்நாடு முன்னேற வேண்டும், தமிழ் மக்கள் முன்னேற வேண்டும், தமிழ் மொழி வளர வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்”
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.