மக்களவைத் தேர்தல் : "ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி குறித்த முடிவு அறிவிக்கப்படும்" - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட உள்ள பாஜக கூட்டணி குறித்த முடிவு ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தேதியை அறிவித்தார். இதன்படி, ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஜூன் 4-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படியுங்கள் : IPL 2024: CSK vs RCB போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் தொடக்கம்!
அப்போது அவர் கூறியதாவது :
"தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்த தகவல் ஓரிரு நாட்களில் முடிவு செய்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். பாஜக தேர்தலுக்கு தயாராக இருக்கிறது. இந்த தேர்தல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் சவாலான ஒன்று.இந்த முறை தமிழ்நாட்டில் தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது.
கடந்த தேர்தலின் போது தமிழ்நாட்டில் பண புழக்கம் அதிமாக இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் அப்படி இருக்க வாய்ப்பு இருக்காது. தேர்தல் தொடர்பாக புகார் ஏதும் வந்தால், அடுத்த நூறு நிமிடங்களில் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். கூறியதைபோல செய்வார்கள் என்று நம்புகிறோம்.
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்,மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்கள் திட்டத்தை வரவேற்கின்றோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 18 நாள் தான் பிரச்சாரத்திற்கு உள்ளது. தேர்தலுக்கு மிகவும் குறைவான நாட்கள் தான் உள்ளது.
பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாட்டில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். இது இன்னும் அதிக உற்சாகத்தை எங்களுக்கு தரும். 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்யும்போது விளவங்கோடு தொகுதிக்கும் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 39 தொகுதிகளுக்கும் சேர்த்துதான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.