“அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது!” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ராஜஸ்தானின் தோல்பூரில் இன்று (நவ.22) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
நாட்டின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். முன்பு தன்னை ஓபிசி என அடையாளப்படுத்தி வந்தார் பிரதமர் மோடி. நான் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த தொடங்கியபின்பு தற்போது நாட்டில் ஏழை என்ற ஒரே சாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருகிறார்.
கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இருக்கும் வேலைவாய்ப்புகளையும் குறைத்து வருகிறது. நாட்டைக் காப்பதற்காக கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவுகளை அக்னிபாத் திட்டத்தின் மூலம் பாஜக சிதைத்துள்ளது.” என்று ராகுல் காந்தி பேசினார்.