"பாஜகவிற்கு திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது" - அமைச்சர் மனோ தங்கராஜ்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நயினாரோ, பாஜகவோ திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும் பேச தகுதி கிடையாது. இன்று நாடே சிரிக்கிறது, ஏனென்றால் வாக்கு திருட்டு மூலம் ஒரு கட்சி ஆட்சியில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை குற்றம் கூறுவது என்றால் இது வெட்க கேடு.
அதிமுக, பாஜக கூட்டணி எப்படி தமிழகத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்புகளுக்கும் நேரடியாக பகிரங்கமான ஒரு கேள்வி வைக்கிறேன். 1967 ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் கொலை முயற்சியின் போது அவரது வீட்டை தீ வைத்து கொளுத்தியதா இல்லையா, பொன் ராதாகிருஷ்ணன் இல்லை என்று கூறுவாரா.
அவர்கள் வீட்டை கொளுத்தினார்கள், டெல்லியில் நடந்த கலவரத்தில் எட்டு பேர் உயிரிழந்து போனார்கள் இது வரலாற்று உண்மை. இப்படி பட்ட கொடுமைகளை செய்த பாஜகவும் ஆர்எஸ்எஸ் தான் இன்று வாக்குக்காக காமராஜரை தூக்கி போடுகின்றனர். அவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.