"பாஜக தாங்கள் ஆளும் மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது" - ஜோதிமணி எம்.பி. பேட்டி!
டெல்லியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,
"தொகுதி மறுசீரமைப்பு தென்மாநிலங்களை கடுமையாக பாதிக்கும், இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இந்த மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக விவதாம் கோரியது நிராகரிக்கப்பட்டது, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவையில் போராடினோம். இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசும் இந்த விவகாரத்தில் கடுமையாக போராடும் சூழல் வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வெள்ளம், புயல் நிவாரண நிதிகளை வழங்க மறுக்கும் மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி வாரக்கடனை ரத்து செய்துள்ளது.
ஆன்லைன் கேம் காரணமாக பல உயிர்கள் பறிபோயுள்ளது, ஆனால் அந்த உயிரிழப்பு தொடர்பான எந்த தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கேமை தடை செய்ய மாநில அரசு மட்டும் தடை சட்டம் கொண்டு வந்தால் போதாது, மத்திய அரசும் ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களின் வாரக்கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு அந்த நிறுவனங்களின் விவரத்தைக்கூட நாடாளுமன்றத்தில் தெரிவிக்க மறுக்கிறது.
சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி என்பது ஏழை மக்கள், குறு சிறு நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் செலுத்தும் வரியை கொண்டு 10 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்துள்ளனர். பாஜக தமது அரசியல் ஆதாயத்துக்காகவே மாநில மக்களை விழிப்புணர்வு இல்லாமல் வைத்துள்ளது.
குறிப்பாக கல்வி, பொருளாதாரம், உள்ளிட்டவைகளில் மக்களை முன்னேற விடாமல் தடுத்து வருகிறது. ஏழை எளிய மக்கள், உழைக்கும் மக்கள், விவசாயிகளின் உழைப்பை சுரண்டி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து காணிக்கை ஆக்கியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.