நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக! தமிழகத்திற்கு 2 பொறுப்பாளர்கள் நியமனம்!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. தமிழகத்திற்கு அரவிந்த் மேனன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவும் அதற்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொறுப்பாளர்கள் மற்றும் துணை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டுள்ள உத்தர பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்துக்கு வினோத் தாவ்டே, ஜார்கண்ட் மாநிலத்துக்கு லட்சுமிகாந்த் பாஜ்பாய், ஹரியானா மாநிலத்துக்கு குமார் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜகவுக்கான பொறுப்பாளர்களாக அரவிந்த் மேனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் அரவிந்த் மேனன் பாஜகவின் தேசிய செயலாளராக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் பின்புலத்தை கொண்ட இவர் ஏற்கனவே தெலுங்கானா மாநில பாஜகவின் இணை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுதாகர் ரெட்டி தமிழக பாஜக இணை பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு தமிழகத்தின் நிலவரம் என்ன? என்பது நன்கு தெரியும். இத்தகைய சூழலில் அவருக்கு தமிழக பாஜகவின் தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக நாடாளுமன்ற தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.