ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக தமிழக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது.
இந்த கொலையில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாகவுள்ள நிலையில், அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் பாஜக நிர்வாகி செல்வராஜையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..
” பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.