“கட்சியில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர்” - பாஜக மீது அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்
தங்களது கட்சியில் இணையுமாறு பாஜகவினர் தன்னை கட்டாயப்படுத்துவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த வாரம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசியதாகவும், எம்.எல்.ஏ.-வுக்கு தலா ரூ.25 கோடி என 7 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படியுங்கள் ; பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை டெல்லி மாநில பாஜகவினர் மறுத்தனர். மேலும், ‘பேரம் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கெஜ்ரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயர்மட்டக் குழு டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது. இந்நிலையில், பிப். 03-ம் தேதி டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் விசாரணையையும் குற்றப்பிரிவு போலீசார் தொடங்கினர்.இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவில் சேருமாறு தன்னை சிலர் கட்டாயப்படுத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனக்கு எதிராக எந்த ஒரு சதி திட்டத்தையும் தீட்டலாம். நானும் உறுதியாக இருக்கிறேன். நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கப்போவது இல்லை. பாஜகவில் சேர்ந்து விடுங்கள். அப்போது உங்களை விட்டுவிடுகிறோம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், ஒருபோதும் பாஜகவில் சேரமாட்டேன் என்று அவர்களிடம் நான் திட்டவட்டமாக கூறினேன். நான் ஒருபோதும் பாஜகவில் சேரப்போவதே இல்லை" என்று கூறினார்.