பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்... காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளை தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரபடுத்தியுள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஎம்(எல்), சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல கட்சிகள் பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கான கூட்டணி அமைத்துள்ள நிலையில் தொகுதி பங்கீடு மற்றும் இதர சிக்கல்கள் குறித்த ஆலோசிக்க இன்று டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர்களை ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தேஜஸ்வி யாதவ் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி, கே.சி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே பீகாரில் தேர்தல் பிரச்சாரங்களை தீவிர படுத்துவதும், தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சிகளுக்கு வழங்க வேண்டிய சட்டமன்ற தொகுதிகள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.